டில்லி
வரும் 8 ஆம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்கள் மீண்டும் திறக்க உள்ள நிலையில் அங்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பித்தது. அதையொட்டி அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் வரும் 8 ஆம் தேதி முதல் மாநில அரசுகள் அங்குள்ள நிலையைப் பொறுத்து வழிபாட்டுத் தலங்களைத் திறக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.
நேற்று இரவு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில் காணப்படுவதாவது :
- வழிபாட்டு தலங்களின் நுழைவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும், வரும் மக்கள் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயம் ஆகும்
- வழிபாட்டு தலங்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
- முகக்கவசம் அணிந்திருப்பவர்களை மட்டுமே வழிபாட்டுத் தலத்துக்குள் அனுமதிக்க வேண்டும்
- கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பதாகைகள், சுவரொட்டிகளை வழிபாட்டுதலங்களில் வைக்க வேண்டும். ஒலிபெருக்கி, வீடியோ மூலம் அவ்வப்போது கொரோனா தடுப்பு விழிப்புணர்வு குறித்து அறிவிக்க வேண்டும்.
- வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்கள் தங்கள் செருப்பு,ஷூ போன்றவற்றை தாங்கள் வரும் வாகனத்திலேயே விட்டுவிடலாம். அல்லது தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ நடந்து வந்திருந்தால், செருப்புகளை தனியாக வைக்க வேண்டும்
- வழிபாட்டு தலங்களில் வாகனங்களை நிறுத்துமிடங்களில் முறையாக சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், அதை கண்காணிக்கவும் நி்ர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- வழிபாட்டு தலங்களுக்கு வெளியேஇருக்கும் தேநீர் கடைகள், உணவகங்கள், கடைகள் போன்றவற்றில் சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்
- வழிபாட்டு தலங்களில் சமூகவிலகலைக் கடைபிடித்து வரிசையில் நிற்க வேண்டும், அமர வேண்டும். அதற்கான அடையாளம் சமூக விலகலைக் கடைபிடித்து இட வேண்டும்
- வழிபாட்டு தலத்தில் நுழைவாயில், வெளியேறும் வாயில் தனித்தனியாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்
- வழிபாட்டுத் தலத்துக்குள் நுழையும்போது வரிசையில் நின்றால் 6 அடி இடைவெளிவி்ட்டு நிற்க வேண்டும்
- சமூக இடைவெளிவிட்டு இருக்கைகளை வழிபாட்டு தலத்தில் அமைக்க வேண்டும்
- வழிபாட்டு தலத்தில் குளிர்சாதன வசதி இருந்தால் 24 முதல் 30 டிகிரி வரை இருக்குமாறும், ஈரப்பதம்40 முதல் 70 சதவீதம் இருக்குமாறு வைக்க வேண்டும்
- புனித நூல்களைத் தொடுதல், சிலைகளைத் தொடுதல் அனுமதிக்கக் கூடாது
- கூட்டமாகக் கூடுதல், கூட்டம் நின்று வழிபாடு செய்தல் தடை செய்யப்படுகிறது
- பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்கள் ஒலிபரப்பலாம் ஆனால் குழுவாக பக்தி பாடல்களை பாடுவது அனுமதிக்கப்படாது
- வழிபாட்டு தலத்தில் ஒருவொருக்கொருவர் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து வாழ்த்துக் கூறுதல் கூடாது
- வழிபாட்டுத் தலத்தில் பொதுவான தரைவிரிப்புகளில் நின்று வழிபாடு செய்வதற்கு பதிலாக அனைவரும் தனித்தனியாக தரைவிரி்ப்புகளை பயன்படுத்தி அதை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்
- வழிபாட்டுத்தலத்துக்குள் புனித நீர் தெளிப்பது, வழங்குவது, பிரசாதங்களைக் கைகளால் வழங்குவது அனுமதிக்கப்படாது
- சமுதாய உணவுக்கூடம், லங்கர் போன்றவற்றில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
- வழிபாட்டு தலங்களை பராமரிக்கும் நிர்வாகம் அடிக்கடி அதை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்
- குறிப்பாக தரைப்பகுதியை கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
- வழிபாட்டு தலங்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் முகக்கவசம், கையுறை போன்றவற்றை முறையாக குப்பைத்தொட்டியில் போட வேண்டும்
- ஒருவேளை வழிபாட்டுத் தலத்துக்குள் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால். அவரை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும், அவருக்கு முகக்கவசம் வழங்கி,அருகில் உள்ள மருத்துவரை அழைத்து பரிசோதிக்க வேண்டும்.
- மேலும் சுகாதார மையம்,அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
- ஒருவேளை அந்த நபர் கொரோனா பாஸிட்டிவாக இருந்தால் அவர் அமர்ந்திருந்த இடத்தை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.