சென்னை:
காவிரி பிரச்சினை ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று முதல் மீண்டும் வழக்கம் தொடங்கியது.
காவிரி பிரச்சினையில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் பெரும் கலவரம் வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். ஏராளமான கனரக வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மாநில அரசின் மறைமுக ஆசியோடு செப்டம்பர் 9ம் தேதி கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது.
அன்று முதல் இன்று காலை வரை தமிழக அரசு பஸ்கள் எதுவுமே கர்நாடகாவிற்குள் செல்லவில்லை. பெங்களூர் செல்ல வேண்டிய பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் அரசு பஸ்களை பயன்படுத்தி பெங்களூருக்கு வர முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதிப்பட்டனர். லாரி உரிமையாளர்களும் சரக்குகளை கையாள முடியாமல் அவதிப்பட்டனர்.
இரு மாநில எல்லையில் 2 கி.மீ தூரம் பரிதாபமாக நடந்து கர்நாடக எல்லைக்குள் சென்று உள்ளூர் பஸ்கள் மூலம் பெங்களூர் நகருக்குள் சென்றனர்.
இதையடுத்து போக்குவரத்து பெரிதும் முடங்கியது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு அனுமதி மறுத்ததை தொடர்ந்து, கர்நாடகாவும் தன்னிடம் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட சம்மதம் தெரிவித்ததை அடுத்து சகஜ நிலை திரும்பி உள்ளது.
கடந்த 1 மாதத்திற்கு பிறகு இரு மாநிலங்கள் நடுவே இன்று காலை முதல் போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. தமிழக பதிவெண் கார்களும், கர்நாடக பதிவெண் கார்களும் பரஸ்பரம் பிற மாநிலங்களுக்குள் நுழைய போலீசார் அனுமதித்தனர்.
28 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்புடன் கர்நாடகாவிற்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்ட எல்லையிலும் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளது.
ஓசூர் எல்லையில் 28 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக லாரிகள் இன்று பாதுகாப்புடன் இயக்கப்படு கின்றன. அதேநேரம், தமிழக அரசு பஸ்கள் இன்னும் இயங்கவில்லை. மாலைக்குள் அவையும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.