புதுச்சேரி :

புதுச்சேரி சட்டசபை இன்று ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில், பாஜக நியமன எம்எல்ஏக்களை சட்டசபைக்குள் நுழைய சபாநாயகர் தடை  காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியை சேர்ந்த 3 பாஜகவினருக்கு ஆளுநர் கிரண்பேடி சட்டமன்ற உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால், அவர்களை எம்எல்ஏக்களாக ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம், மறுத்துவிட்ட நிலையில், அதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், உயர்நீதி மன்றம் நியமன எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செல்லும் என்று அறிவித்துள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரை சந்தித்தனர்.

அப்போது, உயர்நீதி மன்ற உத்தரவு கிடைத்ததும், அதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்னரே, அவர்களை சட்டசபைக்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்  புதுச்சேரி சட்டசபை இன்று கூடியது. காலை 9.30 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், கவர்னர் கிரண் பேடி உரையாற்றினார. அதையடுத்து , இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்

மேலும், இன்றைய கூட்டத்தில்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி  இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கிடையில் சபாநாயகரின் தடையை மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்று பா.ஜ.,வை சேர்ந்த 3 நியமன எம்எல்ஏ.,க்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அவை காவலர்களுக்கும், நியமன எம்எல்ஏ.,க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

போலீசார் சட்டசபைக்குள் செல்ல அனுமதி மறுத்ததை அடுத்து 3 பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்களும் சட்டசபை முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சட்டசபை வளாகம் பரபரப்புடன் காட்சி அளிக்கிறது.