நொய்டா

போதை மருந்து கடத்தும் கும்பலான இரு நைஜீரியர்கள் பல நாட்களுக்கு தேவையான உணவு குடிநீருடன் நொய்டாவில் பதுங்கி இருந்துள்ளனர்

நொய்டாவில் உள்ள ஒரு வீட்டை மூன்றாண்டுகளுக்கு நைஜீரியா நாட்டினர் இருவர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.   அவர்கள் தாங்கள் பிசினஸ் விசா மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளதாக வீட்டு சொந்தக்காரரிடம் கூறி உள்ளனர்.     வெளிநாட்டினர் வாடகைக்கு தங்கும் போது தங்களைக் குறித்த விவரங்களை உள்ளூர் காவல்நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த இரு நைஜீரியர்களும் இதுவரை உள்ளூர் காவல்துறையினரிடம் எவ்வித விவரமும் அளிக்காமல் இருந்துள்னர்.  அக்கம் பக்கத்தில் உள்ளோரிடமும் எவ்வித தொடர்பும் இன்றி வசித்துள்ளனர்.   வெளிநாட்டினர் குறித்து உள்ளூர் காவல்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.   அந்த சமயங்களில் இவர்கள் பதுங்கி இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை அன்று திடீர் சோதனை நடத்திய போது இந்த வீட்டில் 18 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.  இந்த போதை மருந்தின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி ஆகும்.    அத்துடன் 1.9 கிலோ எடையுள்ள கோகைன் இந்த இல்லத்தில் பிடிபட்டுள்ளது.   இந்த இரு நைஜீரியர்களின்  பெயர் ஹென்றி இடியோஃபோர் மற்றும் சிமண்டோ ஒகோரா ஆகும்.  இதில் சிமண்டோ என்பவர் பெண் ஆவார்.

இவர்கள் இந்த இல்லத்தில் தங்கி போதை மருந்துகளை தயாரித்து  ஐதராபாத், பெங்களூரு, மற்றும் சென்னை மூலமாக பல நாடுகளுக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.   இந்த இல்லத்தில் இவர்கள் பல மாதங்களுக்கு தேவையான உணவு, குடி நீர் போன்ற பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.    தாங்கள் பதுங்கி உள்ள நாட்களில் இதை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ள்னர். அத்துடன் போதை மருந்துகளை இவர்கள் குரியர் மூலம் மேலே கூறப்பட்ட நகரங்களுக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு தொடர்புடைய ஒரு தென் ஆப்ரிக்க பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர்களை தவிர மேலும் ஒரு நைஜீரிய போதை மருந்து கும்பல் இவர்களுடன் செயல்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.   மற்றவர்களை போதை மருந்து தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.   இவ்வளவு போதை மருந்துகள் ஒரே இடத்தில் பிடிபட்டது இதுவே முதல் முறையாகும்.