மும்பை: டாடா குழுமத்தின் புதிய தலைவராக மறைந்த ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோரதர் நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுஉள்ளார். நோயல் டாடா 2000 களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக இருந்து வருகிறார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மும்பை மருத்துவமனையில் 86 வயதில் இறந்த ரத்தன் டாடாவுக்குப் பிறகு நோயல் பதவியேற்றார்.
முதுபெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை இரவு காலமானார். கடந்த சில காலமாக உடல்நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம், ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரித்நது. இதையடுத்து அவரது உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள NCPA வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. நேற்று மாலையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் பார்சி சமூக மக்களின் பிரார்த்தனை கூடம் உள்ள வொர்லி நகராட்சி மயானத்தில் நடைபெற்றது. ரத்தன் டாடா பார்சி சமூகத்தை சேர்ந்தவர். மும்பையில் பார்சி சமூகத்தினர் உயிரிழந்தால் அவர்களது உடல் மலபார் ஹில்ஸ் பகுதியில் பார்சி மக்களால் கட்டப்பட்ட அமைதி கோபுரத்திற்கு (Tower Of Silence) எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையாக்கப்படுவதுதான் வழக்கமாக இருந்தது. இந்த அமைதி கோபுரம் தக்மா என்றும் அழைக்கப்படுகிறது.‘ ஆனால் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டாடா குழுமத்தின் புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா டாடா குழுமத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நோயல் டாடா ஏற்கனவே டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வரும் நிலையில், தற்போது டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நோயல் டாடா, டாடா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான டாடா ஸ்டீல், வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மும்பயில், சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் கூட்டம் நடைபெற்றது. இதில், டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
டாடா டிரஸ்ட் என்பது அனைத்து 14 டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அமைப்பாகும். எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகி இருப்பதை விரும்பும் நபராக நோயல் டாடா அறியப்படுகிறார். இவர் 2014 முதல் ட்ரெண்ட் லிமிடெட் தலைவராக பணியாற்றி வருகிறார். 2019 இல் சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் டாடா சேர்ந்தார். இவர் 2018 இல் டைட்டன் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், மார்ச் 2022 இல் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் டாடா குழுவிற்குள் தனது பங்கை மேலும் வலுப்படுத்தினார்.
நோயல் டாடா 2010 மற்றும் 2021 க்கு இடையில் டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார். அவரது பணியின் போது, நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது. வோல்டாஸ் லிமிடெட் மற்றும் டாடா ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட டாடா குழுமத்தின் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் நோயல் டாடா உள்ளார். அவரது மூன்று குழந்தைகள் – நெவில், மாயா மற்றும் லியா – டாடா குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களின் அறங்காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
டாடா குழுமத்தை நிறுவிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1892 ஆம் ஆண்டில் நோயல் மற்றும் ரத்தனின் பெரியப்பா ஜம்செட்ஜி டாடா அவர்களால் டாடா டிரஸ்ட்ஸ் அமைக்கப்பட்டது. டாடா அறக்கட்டளைகள் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி போன்ற பல்வேறு துறைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.