வாஷிங்டன்: கொரோனா ஊரடங்கு முடிவுக்குப் பிறகு, உலகில் ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் நலனுக்காக, அனைத்து நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து ரூ.75 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் பரிசை வென்ற 88 உலகத் தலைவர்கள் பொது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிறகான காலகட்டத்தில், ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் நலன் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய்லாமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் ப்ரவுன், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் பரிசை வென்ற 88 உலகத் தலைவர்கள், சில எதிர்கால திட்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அனைத்து நாட்டு அரசுகளும், தங்களுடைய கொரோனா நிவாரண நிதியிலிருந்து 20% ஐ, ஏழை எளிய மக்களுக்கு செலவிட வேண்டும். இதன்மூலம், ஒரு கோடி உயிர்கள் பாதுகாக்கப்படும். ஊரடங்கு மற்றும் அதன்பிறகான காலக்கட்டத்தில், ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக ரூ.75 லட்சம் கோடி நிதி திரட்டப்பட வேண்டும். இந்தத் தொகை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக செலவிடப்பட வேண்டும்.
குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். சுகாதாரம், குடிநீர், துப்புரவு மற்றும் கல்வி தொடர்பான நிலையான வளர்ச்சித் திட்டங்களுக்கு, இந்தப் பெரிய தொகை சிறந்த உதவியாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.