சைதாலிப்பூர், அரியானா.

லகமே யோகா தினத்தை விமரிசையாகக் கொண்டாடும் இந்நாளில் யோகா குரு பாபா ராம்தேவ் சொந்த ஊரான அரியானாவிலுள்ள சைதாலிப்பூரில் ஒரு கொண்டாட்டமும் நடைபெறவில்லை.

அரியானா மாநிலம் சைதாலிப்பூரில் 1965ஆம் வருடம் பாபா ராம்தேவ் பிறந்தார்.  அவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.  அவரது குடும்பத்தினர் அனைவரும் ஹரித்வாருக்கு இடம் பெயர்ந்த போதும் அவர் மூத்த சகோதரரான தேவ்தத் தனது மனைவி தன்மாயாவுடன் இந்து வசித்து வருகிறார்.  அவர்களுக்கு இங்கு புதிதாக கட்டப்பட்ட வீடும் 15 ஏக்கர் நிலமும் உள்ளது.

ராம்தேவின் பதஞ்சலி யோக்பீட் யோகா தினத்தை முன்னின்று நடத்தி வருவது தெரிந்ததே.  அதனால் ராம்தேவின் சொந்த ஊர்க் கொண்டாட்டங்களைப் பற்றி செய்திகள் சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  ஊரில் கொண்டாட்டத்துக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாததோடு பலருக்கு இப்படி ஒரு தினம் இருப்பதே தெரியவில்லை.  யோகா தினம் என்பது என்ன என கிராம மக்களில் சிலர் பத்திர்கையாளர்களையே திரும்பக் கேட்டுள்ளனர்

அந்த ஊர் மக்களிடம் கேட்டபோது, அங்கு 20 அல்லது 30 பேர் யோகா பயிற்சி  தங்கள் வீடுகளிலேயே செய்வார்கள் எனவும் அது தினசரி செய்வதே எனக் கூறினார்கள்.

அவரது அண்ணி, தான் தினசரி யோகா பயிற்சி செய்வதில்லை என்றும்,  வீட்டு வேலைகளை கவனிக்கத்தான் தனக்கு நேரம் இருப்பதாகவும் கூறினார்.  மேலும் ராம்தேவ் மீது அவ்வூர் மக்களுக்கு பொறாமையாக உள்ளதால் அவர் செய்யும் எந்த ஒரு நல்லதுக்கும் யாரும் ஆதரவளிப்பதில்லை எனவும் கூறினார்.  ராம்தேவ் யோகா பயிற்சிக்காக அவ்வூர் பஞ்சாயத்தில் நிலம் கேட்டதாகவும் அதை தர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

அதைப்பற்றி பஞ்சாயத்தாரிடம் விசாரித்த போது, பாபாவுக்கு சொந்தமான நிலத்தை உபயோகிக்காமல் பஞ்சாயத்து நிலத்தை கேட்டதால் தரவில்லை என கூறினார்கள்.   பாபாவின் தூரத்து உறவுப் பெண்மணி ஒருவர் இதே மாவட்டத்தில் இருந்துக் கொண்டு இந்த ஊருக்கு அவர் வருவதே இல்லை என்பதால் அவரை ஊர் மக்கள் நம்பவில்லை என்றும், ஊர் மக்களுக்கு எந்த ஒரு உதவியும் அவர் செய்யவில்லை எனவும் கூறி உள்ளார்.

மொத்தத்தில் ஊரெல்லாம் கொண்டாட்டம், சொந்த ஊரில் திண்டாட்டம் என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது