பூனே

ரசு மருத்துவமனைகள் எதிலும், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், போன்ற எந்த நோய்க்கான தடுப்பூசியும் இல்லை எனும் செய்தி மக்களிடையே கடும் பீதியை உருவாக்கி உள்ளது.

புனேவின் புறநகர் பகுதியான பிம்ப்ரியில் எச்1என்1 ஃப்ளூ காய்ச்சலால் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைகளை அணுகிவருகின்றனர்.  ஆனால் அரசு மருத்துவ மனைகளில் எந்த ஒரு நோய்க்கும் தடுப்பூசி இல்லை.  இது மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

மருத்துவர்களும், மற்ற சுகாதார ஆர்வலர்களும் இந்த வைரஸ் பரவுவது பற்றி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லாத காரணத்தால், மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.  தடுப்பூசி ஒன்றுக்கு ரூ. 700-800 விலை என்பதால் பலரால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள முடிவதில்லை.  மகாராஷ்ட்ரா மாவட்டத்தில் தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா, பன்றிக் காய்ச்சல் அபாயமும் உள்ளது.

மருத்துவர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சரியான நேரம் என வலியுறுத்துகிறார்கள்.   இந்த எச்1என்1 வைரஸ் கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களை விரைவில் தாக்கும் என்பதால் உடனடியாக இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

இந்த தடுப்பூசிகளை உடனடியாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசு சுகாதாரத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் அரசு தரப்பில் இந்த செய்தி தவறானது என்றும், தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது எனவும் கூறியுள்ளது.  ஆனால் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன போன்ற தகவல்களை தர அரசு மறுத்து விட்டது.