டில்லி
சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் காத்திருந்தால் அந்த வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வண்டிகள் வெகுநேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. இதையொட்டி நான்கு சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பணமில்லா பரிவர்த்தனை அதிகரித்ததுடன் வாகனங்கள் காத்திருக்கும் நேரமும் வெகுவாக குறைந்துள்ளன.
இருப்பினும் ஒரு சில சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க நேரிடுவதாகப் புகார்கள் வந்தன. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நேரத்தை மேலும் குறைக்க புது வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமலாக உள்ளன
சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு மஞ்சள் கோடு வரையப்பட உள்ளது. இந்த கோட்டை தாண்டி வாகனங்கள் நிற்க நேர்ந்தால் அவை அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் சுங்கச் சாவடியைக் கடந்து செல்லலாம். பணம் செலுத்தும் இடத்தில் வாகனங்கள் 10 விநாடிகளுக்கு மேல் நிற்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.