டெல்லி:
மகாராஷ்டிராவில் தாங்கள் ஆட்சி அமைக்க கவர்னர் அவகாசம் அளிக்க வில்லை என்று குற்றம் சாட்டி, சிவசேனா கட்சி சார்பில் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கிடையில், இன்று இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் அவகாசம் அளித்துள்ள நிலையில் , மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாகவும், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்தியஅமைச்சரவை பரிந்துரை செய்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனான கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், சிவசேனாவின் பிடிவாதம் காரணமாக, அங்கு கூட்டணி ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் அரியனையில் ஏறிவிடலாம் என்று கனவு கண்டது.
இதையடுத்து, மகாராஷ்டிராவின் இரண்டாவது தனிப்பெரும் கட்சியான சிவசேனா ஆட்சியமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும், எம்எல்ஏ-வுமான ஆதித்ய தாக்கரே, சிவசேனா சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஏக்நாத் பாண்டே உள்ளிட்டோர் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்றிரவு சந்தித்துப் பேசினர். ஆனால், கவர்னர் அவகாசம் வழங்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாகவும், இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக கூறினார். அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துவிட்டு வெறும் 24 மணி நேரம் மட்டுமே கால அவகாசம் வழங்கியிருப்பதாக, ஆதித்யா தாக்ரே நேற்று கூறியிருந்தார். அதன்படி, இன்று (நேற்று) இரவுக்குள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதங்களை பெற்று ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதாகவும், ஆதித்யா தாக்கரே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காத நிலையில், 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணி வரை அவகாசம் வழங்குவதாக ஆளுநர் அறிவித்தார்.
இதையடுத்து ஆளுநரை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் அஜித் பவார், இன்று இரவு 8.30 மணிக்குள் ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருப்பதாகவும், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் கூறினார்.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். அதே போன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இரண்டு கூட்டங்களில் குறைந்தபட்ச செயல்திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
அதே நேரத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க சிவசேனாவும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த சூழலில், மகாராஷ்டிராவில் மூன்று வாரங்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பங் களுக்கு இன்றைக்குள் தீர்வு காணப்பட்டு, அரியணையில் அமரப்போவது யார் என்பது தெரிய வரும் என்ற நிலையில், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கிடையில், சிவசேனா தரப்பில், தங்களுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதி மன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆளுநர் பாஜகவுக்கு அரசாங்கத்தை அமைக்க முடியுமா என்பதைக் குறிக்க 48 மணிநேரம் அவகாசம் அளித்தபோது, தங்களுக்கு ஆதரவு கடிதங்களைப் பெற வெறும் 24 மணிநேரம் கொடுத்தார். பாஜகவின் உத்தரவின் பேரில் ஆளுநர் அவசரமாக செயல்பட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை மறுக்கிறார் என்று சேனா குற்றம் சாட்டி உள்ளது.
பல்வேறு உச்சநீதி மன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, இந்த விஷயத்தில் கவர்னர் ஆட்சி அமைக்க அனுமதித்து, வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க முடியும் ஆனால், கவர்னர் எங்கள் கோரிக்கையை நிராகரித்தது தவறு என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில்,: மகாராஷ்டிரா ஆளுநர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விதித்தால், சிவசேனா உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கபில் சிபல் மற்றும் அகமது படேலுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.