டில்லி
வேலை வாய்ப்பை உருவாக்க அரசு இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.
வேலை இல்லாத திண்டாட்டம் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் துஷ்யந்த் சௌதாலா கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தார். அவர், “சர்வதேச தொழிலாளர் மையம், இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 2017ல் 1கோடியே 83 லட்சமாகவும், 2018ல் 1 கோடியே 86 லட்சமாகவும் உள்ளது அது வரும் 2019 ஆம் ஆண்டில் 1கோடியே 89 லட்சம் ஆகிவிடும் என கூறி உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்க இந்த அரசு ஆண்டுக்கு எவ்வளவு என இலக்கு நிர்ணயித்துள்ளதா?” என கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், “அரசு வேலைவாய்ப்பை பல்வேறு வகைகளில் உருவாக்கி வருகிறது. இதற்காக தனியார் துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்பை அதிகரிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த 2013-16 ஆம் வருடம் வரை பல நேரடி அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு வேலை வாய்ப்பு உருவாக்க இலக்கு ஏதும் நிர்ணயக்கவில்லை. ஆனால் இலக்கு நிர்ணயிக்காமலே வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது” என பதில் அளித்தார்