பெங்களூரு

த்திய அரசின் 15 ஆம் நிதி ஆணையத்தில் ஒரு தென் இந்தியர் கூட இடம் பெறவிலை என கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் நவம்பர் மாதம் மத்திய அரசு 15 ஆம் நிதி ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தில் என் கே சிங் தலைமையில் ஏ என் ஜா, அசோக் லாகிரி, அனூப் சிங், ரமேஷ் சந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளர். முதலில் இடம் பெற்றிருந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கபட்டார். அதன் பிறகு அவருக்கு பதில் ஏ என் ஜா இடம் பெற்றார்.

இந்த ஆணையம் மத்திய அரசு வசூலிக்கும் வரிகளை மாநில அரசுக்கு வரும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 5 வருடங்களுக்கு பிரித்து அளிப்பது குறித்து ஆலோசனை அளிக்க உள்ளது. இவ்வாறு பிரித்து அளிப்பது பற்றி ஆணையம் முடிவு எடுக்கக்கூடாது என ஏற்கனவே தென் இந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா கர்நாடகா ஆகியவை எதிர்ப்புக் குரல் எழுப்பின.

அம்மாநில நிதி அமைச்சர்கள் அந்தந்த மாநிஅல் வரி வருமான தொகையின் படி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கர்நாடக மாநிலத்தில் கடும் வரட்சி நிலவுவதால் நிதி உதவி கோரி அம்மாநில அரசு பலமுறை மத்திய அரசை கேட்டுக் கொண்டது. கடந்த 2018 ஆம் வருடம் 15 ஆம் நிதி ஆணையம் குறித்து நடந்த தென் இந்திய அமைச்சர்கள் கூட்டத்தில் கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கலந்துக் கொண்டார். அப்போது அவர் அந்த கூட்டத்தில் இந்த கோரிக்கை குறித்து பேசி உள்ளார்.

இந்நிலையில் இன்று கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, “15 ஆம் நிதி ஆணையத்தில் தென் இந்தியாவை சேர்ந்த திறமையான ஒருவரை தேர்வு செய்து இணைக்காதது துரதிருஷ்டமானது. தென் இந்தியாவுக்கு தற்போது தேவையான பல கோரிக்கைகளை நிறைவேற்ற ஐந்து உறுப்பினர்களில் ஒருவராவது தென் இந்தியராக இருந்திருக்கலாம்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அடுத்த பதிவில் கிருஷ்ண பைரே கவுடா, “கடந்த 2015 முதல் 20 வரை மத்திய அரசுகர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கீட்டில் கடும் அநீதி இழைத்துள்ளது. வரட்சி மற்றும் வெள்ளம் மாறி மாறி வாட்டிய கர்நாடகத்துக்கு ரூ.1527 கோடி மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ஆனால் மகாராஷ்டிர அரசு ரூ.8195 கோடி பெற்றுள்ளது” என பதிந்துள்ளார்.