போபால்

த்தியப் பிரதேச மாநிலத்தில் சம்பள உயர்வு கேட்டு மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தும் ஒப்பந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகள் உட்படப் பல பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.    இவர்களுக்கும் நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கும் ஊதிய விகிதத்தில் வேறுபாடு உள்ளது.   ஒப்பந்த ஆசிரியர்களுக்கு மிகவும் குறைந்த ஊதிய விகிதமே நடைமுறையில் உள்ளது.

இதற்கு மாநிலம் எங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.    ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் தங்களுக்கும் நிரந்தர பணியில் உள்ளவர்களுக்கு சமமாக ஊதியம் வழங்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.    ஆனால் அரசு அவர்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.    அதனால் அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க அவர்களில் சிலர் மொட்டை அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதில் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த வருடம் ஜனவரி மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.    இந்த உத்தரவு அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், மற்றும் அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

மேலும் கடந்த இரு வாரங்களாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு வேலை நிறுத்தம் நடை பெற்ற சமயத்தில் ஊதியம் தரக் கூடாது என அரசு ஆணையிட்டுள்ளது.   அத்துடன் மொட்டை அடித்துக் கொள்வதை தடை செய்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து போராட்டத்தில் கலந்துக் கொண்ட அனைத்து ஆண், பெண் இரு பாலரும் தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர்.

மேலும் வேலை நிறுத்தத்தை கை விடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.