டெல்லி:

ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்து உள்ளது.

அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம், சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம், அங்கு ராமர்கோவில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு வேறு ஒரு இடத்தில் 5ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல அமைப்புகள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று இஸ்லாமிய சட்ட வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த வழக்கின் முக்கிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று அறிவித்து உள்ளது.

அயோத்தி நிலம் தொடர்பான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அன்று கருத்து தெரிவித்த வக்பு வாரிய வழக்கறிஞர்,  “ஒரு மூடிய அத்தியாயத்தைத் திறக்க” விரும்பவில்லை  என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று வக்பு வாரியத்தின் உயர்மட்டக் குழு கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர்களில், 7ல் 6  பேர், உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து பேசியதாகவும், மறுஆய்வு மனு தேவையில்லை என்று கூறியதாகவும், அதைத்தொடர்ந்து,  உச்சநீதி மன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு  தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்று இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சன்னி  வக்பு வாரிய உறுப்பினர் அப்துல் ரசாக்கான் தெரிவித்து உள்ளார்.

மேலும், அயோத்தியில், மசூதி கட்டுவதற்கு, அரசு நிலம் ஒதுக்கீடு செய்த பிறகு, அதை ஏற்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று, இன்றைய கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.