டெல்லி: மாநிலத்திற்கு உள்ளேயேயும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இ பெர்மிட் பெற தேவையில்லை என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வரும் 31ம் தேதியுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு முடிய இருக்கிறது. இந் நிலையில், 4ம் கட்ட பொது முடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கூறி உள்ளது.
செப். 21 முதல் திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் முடக்கத்தை அமல்படுத்த கூடாது.
மாநிலத்திற்குள், மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ பெர்மிட் பெற தேவையில்லை. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி கிடையாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முழு அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.