தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடைவிதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்துள்ள நிலையில் தீபாவளியன்று டெல்லியில் ஏராளமான பட்டாசு வெடித்ததால் இந்த தடை உத்தரவு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று நீதிபதி அபய் எஸ் ஓக் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றம் அமர்வு கவலை தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் அனைத்து மாநிலங்களும் மாசுபாட்டை குறைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்பதை தெரிவிக்கவும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
நவம்பர் 25ஆம் தேதிக்குள் பட்டாசுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்குமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுக்கு தடை விதித்த டெல்லி காவல்துறையின் உத்தரவை பெரிதாக எடுத்துக் கொள்ளாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்த தடை பெயரளவில் மட்டுமே இருந்ததாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரவை முழுமையாக நிறைவேற்றுவதற்காக சிறப்புப் பிரிவை அமைக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உரிமம் இல்லாமல் யாரும் பட்டாசு தயாரித்து விற்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
‘எந்தவொரு மதமும் மாசு அதிகரிக்கும் அல்லது மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஊக்குவிப்பதில்லை’ என்று நீதிமன்றம் கூறியது. இதுபோன்று பட்டாசு வெடிப்பது தொடர்ந்து நடத்தப்பட்டால், அது குடிமக்களின் ஆரோக்கியத்திற்கான அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்று கூறியது.
தலைநகர் டெல்லி உட்பட தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு பிரச்னை தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், டெல்லியின் பல பகுதிகளில் AQI குறியீடு 400ஐத் தாண்டியது. இது மாசுபாட்டின் மிகவும் தீவிரமான வகையாகும்.