டில்லி,
செல்போன் கோபுரங்களால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் (சி.ஓ.ஏ.ஐ – Cellular Operators Association of India) மீண்டும் கூறியுள்ளது.
செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இதனை இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பு மறுத்துள்ளது.
செல்போன் கோபுரங்கள் குடியிருப்புக்கு அருகில் இருப்பதால் கதிர் வீச்சு தாக்குமோ என்று யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சி.ஓ.ஏ.ஐ,. தெரிவித்துள்ளது.
தொலைதொடர்பு துறை மற்றும் மத்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின் படியே செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதால், அவை மிகவும் பாதுகாப்பானவை தான் என்று சி.ஓ.ஏ.ஐ., கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள செல் ஃபோன் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவு வரையறுக்கப் பட்ட அளவிற்கு உள்ளேதான் இருக்கிறது என்றும் இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
செல்போன் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கையடுத்து, செல்போன் கோபுரத்தை அகற்றக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சிஓஏஐ விளக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளிப்படும் ஒலி அலைகள், கதிர் வீச்சுகள் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருவுற்ற பெண்கள் செல்போன்களை பயன்படுத்துவதால் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக பெரும்பாலான குருவிகள் இனமே அழிந்து விட்டது.
இதுகுறித்து டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் செல்போன்களால் டி.என்.ஏ பாதிப்பு ஏற்படுவதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு ஆய்வுகள் செல்போன் டவரில் இருந்து வெளியாகும் கதிரியக்கத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதை நிரூபித்து உள்ளன.
ஆய்வுகள் இப்படி இருக்கையில், செல்போன் கோபுரங்களால் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என இந்திய செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் தெரிவித்திருப்பது முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.