டில்லி:

ச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான உத்தேசம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் டில்லியில், நீதித் துறை நடைமுறைகளில் நிலுவைகளையும், தாமதங்களையும் குறைத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்.  உச்ச நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 70-ஆக உயர்த்த வேண்டும் என்றும், நீதிபதிகளின் நியமனங்கள் தொடர்பாக குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65-ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62-ஆகவும் உள்ளது. இதனை, 70-ஆக உயர்த்த வேண்டும் என்றார் ஜோசப் குரியன்.
இந்த கருத்தரங்கில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், மதன் பி லோக்குர் உள்ளிட்டோரும் பங்கேற்று தங்களது கருத்துகளை முன்வைத்தனர். அப்போது, மாவட்ட நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன் றங்களிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும்,  உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கொலீஜியம் குழுவால் பரிந்துரைக்கப்படும் பெயர்கள் மீது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அதாவது, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 2 வாரத்துக்குள்ளும், உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு 3 மாதத்துக்குள்ளும் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும்என்றும் வலியுறுத்தப்பட்டது.

உச்சநீதி மன்ற நீதியரசர் ரஞ்சன் கோகோய் சமீபத்தில் அரசாங்கத்திற்கு அளித்த முன்மொழிவுடன் இந்த விவகாரம் குறித்த விவாதம் புத்துயிர் பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல் பெறப்பட்டது.

அதில், மத்தியஅரசு “தற்போது”, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும்  எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்று தெளிவுபடுத்தப் பட்டு உள்ளது.

இதன் காரணமாக நீதிபதிகளின் ஓய்வு அதிகரிப்பதில் மத்தியஅரசு ஆர்வம் காட்டவில்லை என்றம், இது தொடர்பாக எந்தவொரு விவாதங்களும் நடைபெறவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

நீதிபதிகளுக்கான ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கான பிரச்சினை 2002 இல் வெங்கடச்சலியா அறிக்கையில் (அரசியலமைப்பின் செயல்பாட்டை மறுஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை) இடம்பெற்றிருந்தது.  அதைத்தொடர்ந்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது, கடந்த 2014ம் ஆண்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை 62 முதல் 65 ஆண்டாக உயர்த்துவதற்காக அரசியலமைப்பு திருத்த மசோதா  நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விவாதிக்கப்படாமலேயே  காலாவதியானது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான மேற்கத்திய தாராளமய ஜனநாயக நாடுகளில் நீதிபதிகளின் ஓய்வு வயது 70 வயது ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  சில நாடுகளில் நீதிபதிகள் அவர்கள் வாழ்க்கை இறுதிக்காலம் வரை பணியாற்றும் வகையிலும் நியமிக்கப்படுகிறார்கள். . அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தி லும், ஆஸ்திரியா மற்றும் கிரேக்கத்தில் உள்ள அரசியலமைப்பு நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் ஆயுள் முழுவதும் நியமிக்கப்படுகிறார்கள்.

பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே மற்றும் ஆஸ்திரேலியாவில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயது 70 ஆண்டுகள். கனடா மற்றும் ஜெர்மனியில் உள்ள நீதிபதிகள் முறையே 75 மற்றும் 68 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.