ராஞ்சி: பாரதீய ஜனதா – நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடையே ஏற்கனவே பல உரசல்கள் இருந்துவரும் நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் கட்சியை கூட்டணியில் சேர்க்கப்போவதில்லை என்று பாரதீய ஜனதா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பழங்குடியினர் நிறைந்த இந்த மாநிலத்தில், காவிக் கட்சிக்கு எப்போதுமே சற்று செல்வாக்கு உண்டு. கடந்த மக்களவைத் தேர்தலில், இம்மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில், 12 இடங்களை வென்றது பா.ஜ. கூட்டணி.
ஆனால், இம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் செல்வாக்கு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, வரும் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட, அம்மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் விரும்புவதாயும், அதை தேசிய தலைமைக்கும் தெரிவித்துவிட்டதாயும் கூறப்படுகிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சியை மட்டும் கூட்டணியில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதை ஐக்கிய ஜனதாதளத்திற்கும் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அமைச்சரவையில் சரியான முறையில் இடம் ஒதுக்காதது தொடர்பாக, நிதிஷ்குமாருக்கும், பாரதீய ஜனதாவிற்கு ஏற்கனவே உரசல் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் புதிய விவகாரம் வேறு எந்தமாதிரி பெரிதாகுமோ? என்று கேள்வியெழுப்பியுள்ளனர் அரசியல் நோக்கர்கள்.