டில்லி
நேரு வசித்த இல்லமான தீன் மூர்த்தி பவனில் அமைக்கப்பட உள்ள பிரதமர்களின் அருங்காட்சியகத்தில் நேருவின் விவரங்கள் இருக்காது என கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு டில்லியில் தீன் மூர்த்தி பவன் என்னும் இல்லத்தில் சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மரணம் நேரும் வரை வசித்து வந்தார். இந்த இல்லத்தில் அவர் பல பணிகளை நிறைவேற்றி உள்ளார். அவரது வாழ்க்கையில் இந்த இல்லம் ஒரு மறக்க முடியாத இடத்தில் உள்ளது. இந்த இல்ல வளாகத்தில் நேரு அருங்காட்சியக மற்றும் நூலகம் இயங்கி வந்தது.
ஜவஹர்லால் நேரு நினைவு நிதி அலுவலகம் இதே வளாகத்தில் இயங்கி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த அலுவலகத்தை இங்கிருந்து காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இங்கு அமைந்துள்ள நூலகத்தை விரிவாக்க இடம் தேவை எனக் கூறி அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அத்துடன் அதே வருடம் அக்டோபர் மாதம் இங்கு அனைத்து பிரதமர்கள் நினைவு அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது.
கடந்த வாரம் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட்ட மோடி இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெறப்போகும் பிரதமர்கள் பற்றி விவரித்தார். அவர் அப்போது அனைத்து பிரதமர்கள் பெயரையும் குறிப்பிட்ட போதிலும் நேருவின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் இந்த அருங்காட்சியகத்தில் நேரு குறித்த எந்த நினைவுப் பொருளும் இடம் பெறாது என தெரிய வந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மோடிக்கு பிரதமர் நேருவைப் பிடிக்காது என்பது பலமுறை அவர் பேச்சில் வெளிவந்துள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் நேரு மற்றும் அவர் குடும்பத்தினரை விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேரு மற்றும் அவர் வாரிசுகளால் இந்தியா முன்னேற்றம் அடைவது தடுக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி, “இந்நாட்டின் இளவரசர் ராகுல் காந்தி இங்கு வந்து நாட்டின் அமைப்பு மாறுதல் குறித்து பேசியுள்ளார். ஆனால் இந்த அமைப்பை அமைத்தது அவருடைய தந்தை ராகுல் காந்தி, அவருடைய பாட்டி இந்திரா காந்தி மற்றும் கொள்ளுத்தாத்தா நேரு என்பதையும் 60 வருடம் அவர்கள் யாரும் தங்கள் சுய லாபத்துக்காக எந்த மாறுதலையும் செய்யவில்லை என்பதையும் அவர் மறந்து விட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.