திருவள்ளூர்:
திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எப்படியாவது கட்சியை வளர்த்து விட வேண்டுமென்ற நோக்கில், இந்து மதப் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல உத்திகளை பாஜக பின்பற்றி வருகிறது. இதில் ஒன்றாக, நாளை முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தவிருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த யாத்திரையில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றும், திருத்தணியில் தொடங்கும் வேல் யாத்திரை, டிசம்பர் 6ல் திருச்செந்தூரில் நிறைவு பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முஸ்லிம்கள் கடைப்பிடிக்கின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து டிச.6ம் தேதி என்பது நாடு முழுவதும் பதற்றமான நாளாகவே இருந்து வருகிறது. அந்த நாளில் ரதயாத்திரையை முடிக்க வேண்டுமென்று பாஜக திட்டமிட்டிருப்பதில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவும், வேல் யாத்திரை பெயரில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி வேல் யாத்திரையில் பங்கேற்க கூடினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை உயர்நீதிமன்ற ஆணை அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.