உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு AI மற்றும் ChatGPT ஆதிக்கம் காரணமாக 8 மணி நேர வேலை என்பதே ஒழிந்து போகும் என்று கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படவிருக்கும் மாற்றம் குறித்து மொசைக் மற்றும் நெட்கஃபே ஆகிய இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மார்க் ஆண்ட்ரீசென் இதற்கு முன் தெரிவித்திருந்த கணிப்புகள் உண்மையானது.

1993ம் ஆண்டுக்குப் பிறகு இணையதள பயன்பாடு அதிகரிக்கும் என்று இவர் ஏற்கனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது புதிய கணிப்புப் படி AI மற்றும் ChatGPT தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் இசை மற்றும் திரைப்படத் துறையில் அதன் வளர்ச்சி உச்சம் தொடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன தொழில்நுட்பம் காரணமாக இன்னும் 10 ஆண்டுகளில் 8 மணி நேரம் வேலை என்பதே இருக்காது என்றும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் அதிகளவு பணம் சம்பாதிக்க வழி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

https://x.com/hosun_chung/status/1816847096517148945

மேலும், AI தொழில்நுட்பத்தால் தொழில்துறையினரின் செலவினம் மிகவும் சொற்ப அளவே இருக்கும் என்றும் தற்போதுள்ளதை விட 1000 மடங்கிற்கும் குறைவான செலவே ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டம், நிர்வாகம், மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் கடினமாக உழைக்கிறவர்களைக் காட்டிலும் – சிறந்த யோசனைகளைக் கொண்டவர்களிடம் செல்வம் சேரும் என்று குறிப்பிட்டுள்ள 53 வயதான மார்க் ஆண்ட்ரீசென் தகவல் தொழில்நுட்பம் சாராதவர்களின் அன்றாட வாழ்விற்கு வழி என்ன என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை.