பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்.. பார்த்து ரசிக்க ஆட்கள் இல்லை..
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரை ஓரத்தில் 80 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது ‘துலிப் தோட்டம்’.
குற்றால சாரலை அனுபவிக்க இரண்டு, மூன்று மாதங்கள் சீசன் இருப்பது போல், இந்த தோட்டத்து துலிப் பூக்கள் மலர்ந்து , வண்ணமயமாகி, பார்வையாளர்களை கிறங்க வைப்பதற்கும் ஒரு சீசன் காலம் உண்டு.,
இப்போது துலிப் மலர்களை ரசிப்பதற்கான சீசன்.
இந்த வசந்த காலம் ‘ பூமிப்பந்தின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது..
ஆனால் ஊரடங்கால், இந்த வண்ண மலர்கள், ’’ரசிக்கும் சீமான்கள்’’ இல்லாததால் முகம் வாடிக் காணப்படுகின்றன.
உள்ளூர் போட்டோ கிராபர்கள் மட்டுமே ,காலியாக கிடக்கும் பூங்காவில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு துலிப் மலர்களைக் கண்டு ரசிக்க 2 லட்சத்து 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
இப்போது, ஆட்கள் நடமாட்டத்தை காணோம்.
ஸ்ரீநகருக்கு இது சோதனைக்காலம்.
மற்ற ஊர்கள் மூன்று மாதம் தான் ஊரடங்கைக் கண்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் கிட்டத்தட்ட ஓராண்டாக இந்த நகர் ஊரடங்கால் முடங்கி, சுற்றுலாத்துறையையும் முடமாக்கி விட்டது.
‘’இந்த நெருக்கடியில் இருந்து ஸ்ரீநகரும், காஷ்மீரும் மீள்வதற்குக் கொஞ்ச காலம் பிடிக்கும்’’ என்று புலம்புகிறார்கள், ஓட்டல் அதிபர்கள், உள்ளிட்ட தொழில் துறையினர்.
– பா.பாரதி.