யாருக்கும் வெட்கமில்லை..

நெட்டிசன்

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

டலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் முன் டயர் வெடித்து, சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதுகின்றன..

இரண்டு கார்கள் மீது பேருந்து மோதி, கார் பயணிகளில் ஒன்பது பேர் பலி. பத்து பேர் படுகாயம்.
“விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு” என்ற ஒரே ஒரு விஷயத்தோடு இந்த விபத்தை சர்வ சாதாரணமாக கடந்து போகின்றன சமூகமும் மீடியாக்களும்..
பொதுவாக பேருந்தில் ஜோடிகளாக உள்ள பின்பக்க டயர்களைவிட சிங்கிளாக இயங்கும் முன் பக்க டயர்கள் நல்ல கண்டிஷனோடு இருப்பது மிகவும் அவசியம்.
நடந்தது விபத்து என்றாலும், அதற்கான காரணங்கள் என்னென்ன?
ஒரு இயக்கத்தில் நீண்ட தூரம் ஓடக்கூடிய ஒரு அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடிக்கிறது என்றால் எந்த கண்டிஷனில் இருந்தது?
தகுதியில்லாத டயரை கொண்டு ஓட்டுமாறு அனுமதித்திருந்தால் அது யாருடைய குற்றம்? யார் யாருக்கெல்லாம் அதில் பொறுப்பு?
உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டால், எந்தெந்த மட்டத்தில் தவறு என்று எங்கே போய் நிற்குமோ?
ஆனால் எதையுமே வெளியே கொண்டு வர மாட்டோம். அல்லது கொண்டு வர விடமாட்டோம்.
அரசு பேருந்தை நம்பி கட்டணம் கொடுத்து அதில் பயணம் செய்து ஏதாவது ஏற்பட்டாலும் வெறும் மூன்று லட்சம் ரூபாய் தான் நிவாரணம்.
ஒழுங்காக போய்க் கொண்டிருந்த கார்கள் மீது அரசு பேருந்து ஏறி உயிர்களைக் கொன்றாலும் மூன்று லட்ச ரூபாய்தான் நிவாரணம்..
ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் எல்லோரும் அங்கே ஓடுவார்கள்.. 10 லட்ச ரூபாய் நிவாரணம் தருவார்கள். ஆறுதல் சொல்வார்கள்..
ஆனால் அரசு பேருந்தை நம்புபவனும் அரசு பேருந்தால் பாதிக்கப்பட்டவனும் இறந்தால், அவன் அனாதை பிணம்.. அவன் யாராக இருந்தால் என்ன? அவனை நம்பி குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தால் என்ன? மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் பிணத்தை தூக்கிக் கொண்டு போக வேண்டியதுதான்.
இருக்கவே இருக்கின்றன, மீடியாக்கள்… இரவு ஏழு மணி ஆனதும் எந்த கட்சியில் எவனுக்கு பிரச்சனை? எந்த கட்சி எதனோடு போகும் என்று மாய்ந்து மாய்ந்து அலச வேண்டியது தான் அவர்களுக்கு இடப்பட்ட பணி.. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
எல்லாவற்றையும் பிரித்து மேய வேண்டிய எதிர்க்கட்சிக்கோ வாயை திறந்தால், உங்கள் ஆட்சியிலும் போக்குவரத்து கழகங்கள் இந்த லட்சணம்தானே என்று திருப்பி அடிப்பார்களே என்ற பயம்..
[youtube-feed feed=1]