சென்னை:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டிய அவசியம் இல்லை என்று பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஐ.ஐ.டி.யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர், கலந்து கொண்டனர்.
பொதுவாக தமிழகத்தில் அரசு நிகழ்ச்சி துவங்கும் போது தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது வழக்கம். இன்று நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை மாணவா்கள் சிலா் பாடினா். மத்திய அமைச்சா் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படாமல் இருந்தது சா்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில் இது தொடா்பாக பா.ஜ.க. எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, “ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடவேண்டும். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் சென்னை ஐ.ஐ.டி.” என்று கூறியுள்ளார்.