டில்லி

காஷ்மீர் மாநிலத்துக்கு வர தனி விமானம் அனுப்பி வைப்பதாக காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தமைக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் சென்ற வாரம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு, காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின்  கீழும் மாற்றப்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு வாரங்களுக்கு முன்பு அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

மாநிலம் முழுவதும் இருந்த வெளி மாநிலத்தவர் திருப்பி அனுப்பப்பட்டனர். இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புக்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. வெளி  மாநிலத்தில் வசிக்கும் காஷ்மீரிகள் தங்கள் உறவினர்கள் நிலை குறித்து பெரிதும் கவலை அடைந்துள்ளனர். காஷ்மீர் நிலை குறித்து நேரில் பார்வையிடச் சென்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்தார். காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தற்போது காஷ்மீர் மாநிலத்தில்  அமைதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தாம் ஒரு விமானம் அமைத்து ராகுல் காந்தியையும் மற்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகவும் தெரிவித்தார்

இதற்கு ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “அன்புள்ள ஆளுநர் மாலிக் ”நீங்கள் என்னையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். எங்களுக்கு விமானம் தேவை  இல்லை மறாக எங்களை காஷ்மீருக்குள் சுதந்திரமாக பயணம் செய்யவும் அங்குள்ள மக்கள், தலைவர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்திக்க அனுமதித்தால் போதுமானது” எனப் பதில் அளித்துள்ளார்.