சென்னை:  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை விமர்சனத்தை எழுப்பிய நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி கடந்த 13ந்தேதி பள்ளி விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு, கடுமையான வன்முறை நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன், பள்ளியும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. அதன்பிறகே, வன்முறையாக தொடர்பாக திராவிடர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதுதொடர்பான மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் இ நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது  ஆஜரான தமிழகஅரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “மாணவியின் உடற்கூறாய்வு முடிந்து, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிவுற்றதாகவும், அவை அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதக கூறினார். மேலும் மாணவியின் உடற்கூறாய்வு ஆவணங்கள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவ மனைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, காவல்துறை தரப்பில் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையும் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து வாதாடியவர் , பள்ளி மாணவி மரணம் தொடர்பாக டிஐஜி தலைமையில், கூடுதல் எஸ்பி., டிஎஸ்பி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப் பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகிறது. மற்றொரு குற்ற வழக்கில் பள்ளி தாளாளர் தொடர்பு உள்ளதால் அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை. சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக அரசால் பெற்றோர் – ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணாக்கர்களுக்கு கடந்த 27-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன. 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய இரண்டு வாரங்களாகும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது என்று அறிவுறுத்தியவர், விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமெனவும்,மாவட்டத்திற்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் மிக அவசியம் என நீதிபதி குறிப்பிட்டார்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து முன்னிலைபடுத்தப்படுவதால், அவற்றை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும் மோசமாவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும், மாணவர்களை படிக்கும் இயந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புற சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.