வூஹான்:
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக் குழு கூறும்போது, “சீனாவின் வூஹான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. டிசம்பர் மாதத்தில்தான் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதற்கு சாத்தியமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறிவந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு சீனாவுக்குச் சென்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வூஹான் சந்தையில் மருத்துவக் குழு ஆய்வு நடத்தியது. மேலும், முதலில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மருத்துவமனைகளிலும் இக்குழு ஆய்வு செய்தது .

முன்னதாக, பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே வூஹானின் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவவில்லை. உலகின் பல இடங்களில் கரோனா பரவல் நிகழ்ந்துள்ளது என்று சீனா விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.