ஹவுரா
தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்,
மத்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவின் படி வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குக் குடியேறும் இந்து, கிறித்துவர், சீக்கியர், பார்சி உள்ளிட்டோருக்கு உடனடியாக குடியுரிமை அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் வெளியான அசாம் குடியுரிமை பட்டியலில் சுமார் 19 லட்சம் பெயர்கள் விட்டுப் போய் இருந்தன. அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பதால் இந்து மத அமைப்புக்கள் அவர்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டார் அப்போது அவர், “அசாம் மாநில குடியுரிமைப் பட்டியலின் இறுதி வடிவம் வெளியாகி உள்ளது. அதில் சுமார் 12 லட்சம் இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. மத்திய அரசு இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது. இதை ஆர் எஸ் எஸ் ஏற்கனவே பாஜக அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
எனவே பட்டியலில் பெயர் இடம் பெறாத இந்துக்கள் இது குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆர் எஸ் எஸ் அவர்களுக்காகப் போரிடும். அது மட்டுமின்றி நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும் இந்துக்கள் வெளியேற்றப்படுவதை ஆர் எஸ் எஸ் அனுமதிக்காது. விரைவில் இது குறித்து நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.