சென்னை: வடமாநிலங்களைப் போன்று, தமிழகத்தை வெட்டுக்கிளிகள் தாக்க வாய்ப்பில்லை என்று வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் அறுவடை நடந்துவரும் நிலையில், ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக் கிளிகளின் தாக்குதல், அங்கிருந்து குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, இந்த வெட்டுக்கிளிகள் தெற்கே பயணம் செய்து, குஜராத் வரை வந்துவிடுமோ? என்ற அச்சம் தமிழக விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக வேளாண்துறை அதிகாரிகள், “மலைத் தொடர்களைத் தாண்டி வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனபோதிலும், வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு நிலவரத்தை, தமிழக வேளாண் துறை வல்லுனர்களின் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போதைய நிலையில், நெல் உள்ளிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி நடந்து வருகிறது.
காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் நடந்து வருகிறது. வெட்டுக்கிளிகள் படையெடுத்தால், பயிர்கள் நாசமாகி விடும் என்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.