புதுடெல்லி: மதசார்பின்மை என்ற அம்சம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, “இந்திய அரசியல் சாசனத்தில் ‘மதசார்பின்மை’ என்ற வார்த்தை முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இதுதான் இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கட்டுமானம். எனவே, அதை ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தால் மாற்றிவிட முடியாது.
இதை, உச்சநீதிமன்றத்தில் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதிசெய்துள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. எனவே, இந்த வார்த்தையை அரசியல் சட்டத்தின் முன்னுரை தவிர வேறு எந்த இடத்திலும் காண முடியாது.
சட்டப்பிரிவு 370ஐ எளிதாக நீக்கியதுபோல் இதை நீக்கிவிட முடியாது. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்த 15 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தேவை. இந்தியா என்பது இறையாண்மையுள்ள, சமதர்ம, மதசார்பற்ற, ஜனநாயகக் குடியரசு.
இவை நாட்டின் அடிப்படையான அம்சங்கள். இவற்றை அடிப்படையான கட்டுமானங்கள் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதால் இதில் திருத்தம் செய்ய முடியாது. ஒரு பெரும்பான்மை பலம் பெற்ற அரசாலும் முடியாது.
எனவேதான், குறிப்பிட்ட அம்சங்களை நாடாளுமன்றத்தால் திருத்த முடியும் மற்றும் குறிப்பிட்ட அம்சங்களை நாடாளுமன்றத்தால் திருத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, மதசார்பின்மை என்பது அடிப்படை அம்சமாக இடம்பெற்றிருப்பதால் அதை ஒன்றும் செய்ய இயலாது” என்று உறுதிபடுத்தினார் குரியன் ஜோசப்.