புனே:

அசைவம் சாப்பிடாதவர்கள், மது குடிக்காதவர்களுக்கு மட்டுமே தங்கப் பதக்கம் வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் வழங்கப்பட்டு அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நடைமுறை உள்ளது. இதில் புனே பல்கலைக்கழகம் தற்போது புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

இதன் படி தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும். மது குடிக்காதவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

இத்தகவல் ‘தி குயின்ட்’ செய்தி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலை தங்களில் வைரலாகி வருகிறது. இதில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘இந்த அறிவிப்பு அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது… அப்படியென்றால் படித்து பெரும் மார்க் என்ன மதிப்பு உள்ளது? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இது போன்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.