விழுப்புரம்: புயல் மழை வெள்ளத்தால் தங்களுக்கு உணவு, குடிநீர் என எந்தவொரு வசதியும் கிடைக்கவில்லை என கூறிய விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர். இதனால், மீண்டும் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம், மற்றும் மழை வெள்ளத்தால் நிரம்பிய ஏரிகளை முன்அறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டதால், பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டது. விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் வடிந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
இந்ரத நிலையில், விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராம மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது அரசும், அதிகாரிகளும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து சாலை மறியல் செய்தனார். இதனால் சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், கிராம மக்கள் மறியலை கைவிட மாட்டோம். தங்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்றினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி வருகின்றனர்.