டெல்லி: கொரோனா கொரோனா அச்சுறுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ( UPSC Civil Services) தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் பதவிகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 796 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி முதல்நிலை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் மொத்தம் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 750 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்இதற்கான முடிவுகள் அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டமாக மெயின் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மெயின் தேர்வுகள் 5 முறை நடைபெறும். அதன்படி ஜனவரி 8ந்தேதி தேர்வு தொடங்கி பிப்ரவரி 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்படுகிறது.
முதல் நாள் மெயின் தேர்வு ஜனவரி 8ந்தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிவரை தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு நடைபெறும் போது முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா நெறிமுறைகள் காரணமாக, இன்னும் முழுமையாக போக்குவரத்து தொடங்கப்படாததால், பலர் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. சிலர் தேர்வுகளை எழுத முடியாத நிலை உருவானது.
இதனால், தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் UPSC Civil Services தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறி, மனுதாரர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.