சென்னை:
அரசியலுக்கு வருவதுபோல பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி பில்டப் செய்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய சந்திப்பை தொடர்ந்து, இந்த சந்திப்பு,எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்…
ரஜினியின் இந்த செய்தி, வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, அவர் மீண்டும் முருங்கை மரம் ஏறி உள்ளதை தெளிவுப்படுத்தி உள்ளது.
அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது அறிவித்தும், ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்தும், தனது படங்களை மட்டுமே வெற்றிப்படமாக்கி, வசூலை வாரிக்குவித்த ரஜினி, அரசியலுக்கு வருவதாக கூறி இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும், இன்னும் அதற்கான எந்வொரு முயற்சியும் எடுக்காமல் தொடர்ந்து கல்லா கட்டுவதில்தான் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்…
இதுபோன் சூழலில்தான், ஜனவரியில் நடைபெற்ற துக்ளக் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, முரசொலி மற்றும் பெரியார் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் தான் முஸ்லிம் மக்களின் ஆதரவாளர், அவர்களுக்கு எந்தவொரு பிரச்சினை என்றாலும், முதல் ஆளாக வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், முஸ்லிம்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்தவர் டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், உளவுத்துறை தோல்வி அடைந்ததாக கூறி, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.
இதனால், ரஜினி விரைவில் அரசியல் களம் புகுவார் என எதிர்ப்பு நிலவியது. அரசியல் விமர்சகர்களும், ஆய்வாளர்களும் ரஜினி அரசியலுக்கு வந்தால், எந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும், அவர் யாருடன் கூட்டணி வைப்பார், கமலுடன் இணைந்து தேர்தலை சந்திப்பாரா என ஆளாளுக்கு தங்களது கருத்துக்களை சமுக வலைதளங்களிலும் செய்திகளிலும் திணித்து வந்தனர்.
இதுபோன்ற பரபரப்பான சூழலில்தான் இன்று தனது மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து தனது அரசியல் அறிவிப்பு மற்றும் கட்சியின் பெயரை வெளியிடுவார் என எதிர்பார்த்தால், அனைவருக்கும் பெப்பே காட்டி உள்ளார்.
சிஸ்டத்தை மாத்தணும்… என்று கூறி வந்த ரஜினி, இன்று, ஏமாற்றமும் அளிக்கிறது என்று கூறி, தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் ஒத்திப்போட்டுள்ளார்…
தனது மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினி, கூட்டம் முடிவடைந்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்றைய கூட்டம், தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.
அவரிடம் செய்தியாளர்கள், ஏற்கனவே நீங்கள் கூறியபடி, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும் கமலும் சேர்ந்து நிரப்புவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்தவர், அதற்கு நேரம் வரும்போதுதான் பதில் தெரியும் என்று நழுவலாக பதில் கூறினார்…
தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியளார்கள், நீங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன? இன்றைய கூட்டத்தில் என்ன பேசினீர்கள்? என கேள்வி எழுப்பினர்…
அதற்கு பதில் அளித்தவர், கூட்டத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார்…
தொடர்ந்து செய்தியாளர்கள் விடாப்பிடியாக கேள்வி எழுப்ப, மாவட்டச் செயலாளர்களுடன் கட்சி தொடங்குவது குறித்துத்தான் பேசினேன். கூட்டம் திருப்தியாக இருந்தது. அவர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் நான் பதிலளித்தேன். நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அவர்களுக்கு நிறைய திருப்தி.
ஆனால் எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான். அது என்னவென்று நான் இப்போது சொல்ல விரும்பவில்லை. பிறகு சொல்கிறேன் என்றார்…
ஏமாற்றம் என்றீர்களே அது என்ன? என செய்தியாளர்களை ரஜினி மீண்டும் மடக்க, தனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். நேரம் வரும்போது சொல்கிறேன் என்று மீண்டும் கூறிவிட்டு எஸ்கேப் ஆனார்..
ரஜினியின் இன்றைய பேட்டி, மழுப்பலாகவும், நழுவலுமாகவே இருந்தது…. இதன்மூலம் அவர் தனது அரசியல் பிரவேசம் இப்போதைக்கு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்…
ஏற்கனவே அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினி, மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்… இந்த படங்களில் நடிக்கவே அவர் மேலும் சில ஆண்டுகள் கால்ஷீட் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது…
இதுபோன்ற சூழலில், அவர் அரசியலுக்கு வருவது மில்லியன் டாலர் கேள்வியை எழுப்புகிறது… அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே, அவரது எனக்கு ஒரு விஷயத்தில் அவ்வளவு திருப்தி இல்லை. ஏமாற்றம்தான் என்ற அறிவிப்பு, அரசியலுக்கு கால்ஷீட் இல்லை என்பதை சூசகமாக தெளிவுபடுத்தி உள்ளது…