சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என நடிகர் விஜயின் தவெக கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, அங்கு போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கனவே கடந்த தேர்தலின்போது, அங்கு அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவிய நிலையில், இந்த முறையும் நான்குமுனை போட்டி நிலவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, மீண்டும் போட்டியிடும் என கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்து உள்ளது. மேலும் அதிமுக, பாஜக சார்பில் விரைவில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டியில்லை என அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
“தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை” கட்சித் தலைமை அறிவித்துள்ளது.