திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பி உள்ள நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுதொடர்பாக கேரள சட்டமன்றத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கேரள முதல்வரின் தனிச்செயலாளர் சிவகங்கரன், ஸ்வப்னா சுரேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளனர். மாநில அமைச்சருக்கும் தொடர்பாக இருப்பதாகவும், முதல்வருக்கு தெரியாமல் இந்த விவகாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தில் முதல்வரின் அலுவலகத்துக்குத் தொடர்பு உள்ளதால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன
இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், சட்டமன்ற சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை கேரள சட்டமன்ற அவை தொடங்கியதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ வி.டி.சதீஷன் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா புது பிரச்னை ஒன்றை எழுப்பி பேசினார்.
அப்போது, சட்டமன்ற சபாநாயகர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் சபாநாயகராக இருந்து பேரவையை வழிநடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், ஏற்க மறுத்த சபாநாயகர், “இது தொடர்பான நோட்டீஸ் 14 நாட்களுக்கு முன்புதான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, விதிமுறைப்படி அந்த நோட்டீஸ் தற்போது அனுமதிக்க முடியாது” என்று மறுத்து விட்டார். தொடர்ந்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
140 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில், ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 91 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க மற்றும் சுயேட்சையாக தலா ஒரு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இரண்டு பதவியிடங்கள் காலியாக உள்ளன.
பிரனாயி விஜயன் தலைமையிலான மாநில அரசு பெரும்பான்மையுடன் இருப்பதால், நம்பிக்கை யில்லா தீர்மானம் தோல்வியுறும் என்றாலும், இன்றைய விவாதம் மாநில அரசு மீது விழுந்துள்ள கரும்புள்ளியாகவே கருதப்படும்.