சென்னை: கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துபவர்களிடம் தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் அப்பகுதி கிராம பஞ்சாயத்து தலைவர், வாகன நிறுத்த கட்டணம் வசூலித்து வருவதாக கூறி, ராமு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘சேஷபுரீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கோயில் நிலத்தில் வாகனங்கள் நிறுத்த பஞ்சாயத்து தலைவர் கட்டணம் வசூலிக்க எந்த உரிமையும் இல்லை. மேலும், இதுவரை கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வசூலிக்கப்பட்ட தொகையை அறநிலையத் துறை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.