சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும் நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றோர், மீண்டும் அதிமுகவில் சேர்ந்து, ஒன்றிணைந்த அதிமுக உருவாகி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஒபிஸ், சசிகலா, டிடிவியும் அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது, ஒருங்கிணைந்த அதிமுக தேர்தலை சந்திக்கும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம்மாவட்டம், ஓமலூர் பகுதியிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் இடமில்லை என உறுதியாக கூறினார். “இந்த விவகாரம் குறித்து பலமுறை நாம் எடுத்து கூறியிருக்கிறோம் என்றவர், அ.தி.மு.க. தற்போது உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், நீங்கள் நினைத்துக் கொண்டு திரும்பத் திரும்ப இதையே கேட்கிறீர்கள் என்றார்.
பா.ம.க.-வுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கேட்கப்பட்டிருக்கிறதா என்று செய்தியளார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இன்னும் அந்தத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, இப்போது அதைப் பற்றிக் கூறுவது சரியில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அதற்கான முடிவுகளை அறிவிப்போம் என்றார்.
திமுக கூட்டணியில் உள்ள த.வா.க. தலைவர் வேல்முருகன், சட்டசபை நிகழ்வு குறித்து உங்களிடம் பேசினாரா என்ற கேள்விக்கு, அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை; அதேபோல், நாங்களும் அவரை அணுகவில்லை என எடப்பாடி கூறினார்.
மேலும, தேர்தல், கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே முடிவாகும், கொள்கை என்பது நிலையானது; ஆனால், கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கேற்ப அமைக்கப்படும் ஒரு யுத்தக்கள அமைப்பு. வாக்குகள் பங்காகிச் செல்லாமல், அதிக ஆதரவை பெறவே கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. எந்த கூட்டணியும் நிரந்தரமானதல்ல என்று தெரிவித்தார்.