டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு போர்வை வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வெகு வேகமாக கொரோனா பரவி வருகிறது. பல நாடுகளில் உயிர் பலிகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும், அதிகம் பேர் கூடும் இடங்களில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு போர்வை வழங்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திரைச்சீலைகள் அகற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேவையென்றால், ஏசி பெட்டிகளில் பயணிப்போர் வீட்டில் இருந்து போர்வை எடுத்து வர வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.