மதுரை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும், பா.ஜனதாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விரும்பமனு பெற சென்னைக்கு வந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா வளர்த்த அ.தி.மு.க. இயக்கத்தை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிப் பாதையில் நடத்தி வருகிறார். இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இரண்டு கோடி தொண்டர்கள் விருப்ப மனுவை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து மக்களுக்கு பல்வேறு சாதனை திட்டங்களை தந்தது அதிமுக. இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள், 8 கோடி தமிழக மக்களின் நன்மதிப்பை எடப்பாடியார் பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் 68,520 வாக்கு சாவடிகளில் அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பு உள்ளது. சாமானிய மக்களின் இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது.
40 தொகுதிகளில் தனித்தொகுதியைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என்று அம்மா பேரவை தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனை தொடர்ந்து எடப்பாடியார் பெயரில் சென்னை தலைமைக் கழகத்தில் அம்மா பேரவை சார்பில் எடப்பாடியார் போட்டியிட விருப்ப மனுவை நாளை தாக்கல் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைப்பிர்களா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து எடப்பாடியார் அ.தி.மு.க. நிலைப்பாட்டை மன உறுதியுடன் பலமுறை எடுத்துச் சொல்லி விட்டார். மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் கூட தெளிவாக கூறியுள்ளார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்பது தான் அ.தி.மு.க. நிலைப்பாடு.
ஆனால் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை என்பது அவர்கள் கட்சியை பொறுத்த விவகாரம். எனவே அ.தி.மு.க. நிலைப்பாட்டில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. முடிவை தெள்ளத்தெளிவாக எடப்பாடி யார் கூறிவிட்டார். இன்றைக்கு மூன்றாம் பெரிய கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மக்களை காக்கும் பணியில் எடப்பாடியார் மன உறுதியுடன் உள்ளார். மத்திய அரசு, மாநில அரசை எதிர்த்து நின்று 100 சதவீத வெற்றி பெறுவார். இதுதான் அ.தி.மு.க. நிலைப்பாடு, இதில் நாங்கள் உறுதியாக பயணம் செய்வோம்.
இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தகுதி உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்து தலைமை கழகம் அறிவிக்கும். அவர்களை வெற்றி பெறச் செய்ய நாங்கள் பாடுபடுவோம். பாராளுமன்றத்தில் முல்லைப் பெரியாறு, காவிரி குறித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசவில்லை. தமிழகத்தின் உரிமையை காக்க தி.மு.க. கூட்டணியில் உள்ள 38 பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை. வரும் காலத்தில் அவர்களுக்கு சரியான தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள். அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும்.
இவ்வாறு கூறினார்.