சென்னை: பல்கலைக்கழகங்களிலிருந்து இணைப்புக் கல்லூரிகளை தனியேப் பிரித்து, அனைத்தையும் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்றும் மத்திய அரசின் கல்வி வரைவுக் கொள்கைக்கு தமிழக பல்கலைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதன்மூலம், பல்கலைகளின் வருவாய் மோசமாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய வரைவுக் கொள்கையின்படி, பட்டம் வழங்கும் அதிகாரம் உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அதிகாரங்களும் பல்கலைகளிடமிருந்து பறிக்கப்படும்.
இணைப்பு வைத்துள்ள பல்கலைக்கழகங்கள் யாவும் கற்பிக்கும் பல்கலைகள் அல்லது ஆராய்ச்சிப் பல்கலைகளாக மாற்றப்படும். அதற்கு ஒன்று அல்லது இரண்டு வளாகங்கள் இருக்கலாம். அதேசமயம், எந்தக் கல்லூரியும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்காது.
புதிய வரைவுக் கொள்கையின்படி, வரும் 2032ம் ஆண்டிற்குள் பல்கலை இணைப்புபெற்ற அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி கல்லூரி அந்தஸ்திற்கு மாற வேண்டும் அல்லது தாங்கள் இணைக்கப்பட்டுள்ள பல்கலைகளுடன் முற்றிலும் இணைந்துவிட வேண்டும் அல்லது தங்களையே பல்கலைகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி தம்மை மாற்றிக்கொள்ள இயலாத கல்லூரிகள், வயதுவந்தோர் கல்வி மையங்கள் அல்லது பொது நூலகங்களாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகைய திட்டங்களை சாடியுள்ள மாநில பல்கலைகள், இதனால் பல்கலைகளின் வருவாய் மோசமாக பாதிக்கப்படும் என்றும், அனைத்து கல்லூரிகளையும் தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றி செயல்படும் வகையில் இந்த நாட்டில் தேவையான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.