பாட்னா :
பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார் பாட்னாவில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
நிதிஷ்குமார் இன்று (திங்கள் கிழமை) மாலை நான்கு மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார்.
பீகார் மாநிலத்தில் இப்போது பா.ஜ.க.வின் சுஷில் மோடி துணை முதல்-அமைச்சராக இருக்கிறார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இரண்டு துணை முதல்-அமைச்சர் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ.க. 74 எம்.எல்.ஏ.க்களையும், ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 எம்.எல்.ஏ.க்களையும் வைத்துள்ள நிலையில், இரு துணை முதல்வர்களை பா.ஜ,க.வுக்கு தாரை வார்க்க நிதீஷ் ஒப்புதல் வழங்கி விட்டார்.
பாட்னாவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்த கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தார்கிஷோரும், துணை தலைவராக ரேணு தேவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் துணை முதல்-அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.
நிதீஷ்குமாருக்கு, இத்துடன் சிக்கல் முடியப்போவதில்லை. அவரது அமைச்சரவையில் கூடுதல் அமைச்சர் பதவிகளை பெறவும் பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
துணை முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துள்ள சுஷில் மோடி “எனது 40 ஆண்டு அரசியல் பயணத்தில் பா.ஜ.க.வும், சங் பரிவாரும் எத்தனையோ பதவிகளை கொடுத்து என்னை அழகு பார்த்துள்ளது. கட்சி கட்டளையிடும் வேலையை நான் செய்ய தயாராக இருக்கிறேன்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி