மும்பை: மராட்டிய மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை முதல்வராக்க பாரதீய ஜனதா பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை நிதின் கட்கரி மறுத்துள்ளார்.
தான் மத்திய அமைச்சரவையிலேயே தொடர விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பா.ஜ – சிவசேனா கட்சிகள் கடும் முட்டல் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தங்களிடம் பஞ்சாயத்துப் பேசுவதற்கு நிதின் கட்கரியை அனுப்பி வைக்குமாறு சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போதே அவரின் மீது பலரின் கவனம் விழத் தொடங்கியது. தற்போது, அவரையே கட்சி மேலிடம் முதல்வராக்க உள்ளதாக திடீர் தகவல் பரவியுள்ளது. ஆனால், நிதின் கட்கரி இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“மக்கள் எங்கள் கூட்டணிக்கு தெளிவாக வாகக்ளித்துள்ளார்கள். தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் மராட்டியத்தில் அரசு அமையும். நான் டெல்லியில் பணியாற்றவே விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் நிதின் கட்கரி.