மும்பை

த்திய அமைச்சர் நிதின் கட்காரி காற்று மாசுக்கு முக்கிய காரணம் போக்குவரத்து துறைதான் எனக் கூறியுள்ளார்.

நேற்று மும்பையை அடுத்த தானேயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி,

”அதிகரித்து வரும் நகரமயமாக்கலை கருத்தில் கொண்டு, சைக்கிள் ஓட்டுதலை நிலையான நகர்ப்புற போக்குவரத்து விருப்பமாக ஊக்குவிக்க வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, நகரங்களில் நெரிசலை குறைக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்தை ஊக்குவிக்கவும் தனியாக சைக்கிள் ஓடுபாதைக்கான உள்கட்டமைப்பு தேவையாகும்.

காற்று மாசுபாடு இந்தியாவின் மிகப்பெரிய சவாலாகும். இதில் போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பெட்ரோலிய எரிபொருட்களில் இருந்து, மின்சார எரிசக்திக்கு மாறுவதற்கான அவசர தேவை உள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுவதுடன், இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாகவும் மாறி உள்ளது.

தேசங்களின் முன்னேற்றத்திற்கு சுத்தமான எரிசக்தியை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. மின்சார மற்றும் மாற்று எரிபொருட்களுக்கு மாறுவது சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல, பொருளாதார கட்டாயமும் கூட. நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கிய பகுதி உயிரி எரிபொருள்கள். விவசாய கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றுவதில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எரிசக்தி வழங்குபவர்களாக மாறுவார்கள்.”

என உரையாற்றி உள்ளார்