புதுடெல்லி: இந்தியாவின் முக்கிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிலைக்கு மாறுவது தொடர்பாக கடும் கேள்விகளை முன்வைத்துள்ளது நிதிஆயோக் அமைப்பு.
ஹீரோ மோட்டார், ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் போன்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
வரும் 2025ம் ஆண்டில், மேற்கண்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யும் நிலைக்கு மாற வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது மிகவும் குறுகிய கால அவகாசம் என்று அந்த நிறுவனங்கள் கூறிவருகின்றன. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத மத்திய அரசு, “உங்களின் எதிர்ப்பு நடைமுறை சாத்தியமற்றது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத போக்குவரத்திற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இந்த 6 ஆண்டுகாலத்தில் மாறவில்லை எனில், வேறு எப்போது மாற முடியும்?
குடிமக்களுக்கு பாதுகாப்பான ஒரு வாழ்க்கைச் சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டாமா? மாற்றத்திற்காக நீங்கள் எத்தனை ஆண்டுகளை எதிர்பார்க்கிறீர்கள்? 25 அல்லது 50 ஆண்டுகள்? என்பது போன்ற கேள்விகளை நிதி ஆயோக் முன்வைத்துள்ளது.
இக்கூட்டத்தில், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டதோடு, எலக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களான ஆதெர், ரிவோல்ட், டோர்க் மற்றும் கைனடிக் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.