டில்லி

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி அறிவித்த வறட்சி நிவாரண திட்டத்தை  நிதி அயோக் புகழ்ந்துள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பண்டல்காந்த் பகுதியில் கடும் பஞ்சம் எழுந்தது.   அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இடம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வறட்சி திட்டத்தின் வரைவை அளித்தார்.   அப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு பலரும் பயன் அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய்க்காக எருமை வளர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.   இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 100 முதல் ரூ.500 வரை உதவித்தொகை வழங்கப்பட்டது.  விவசாயிகளின் வருமானம் இந்த எருமை வளர்ப்பின் மூலம் வருடத்துக்கு ரூ. 5000 முதல் ரூ.10000 வரை அதிகரித்தது.

அத்துடன் கடந்த 2009-10 ஆம் வருடம் காங்கிரஸ் அரசு விவசாயிகள் நலனுக்காக ரூ.7466 கோடி திட்டங்களை அரசு அறிவித்தது.  இதன் மூலம் பல நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டன.   இரு மாநிலங்களுக்கும் இடையில் உள்ள பல நீர்நிலைகள் செப்பனிடப்பட்டன.   இதன் மூலம் விவசாயிகள் கோதுமை மற்றும் அரிசியை பயிரிட்டு நல்ல ஆதாயம் அடைந்துள்ளனர்.   அதற்கு முன்பு அங்கு சிறு தானியங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன.

இது குறித்து ஆய்வு செய்த நிதி அயோக் இந்த திட்டங்களை வெகுவாக பாராட்டி உள்ளது.   நிதி அயோக் அறிக்கையில், “புதிய கால்வாய்கள் அமைப்பதாலும், நீர் போக்கைச் சற்றே திசை திருப்பியதாலும், விவசாயம் அதிகரித்து விவசாயிகளின் வருமானம் ரூ28000 முதல் ரூ. 50000 வரை உயர்ந்துள்ளது.   அது மட்டுமின்றி இந்த விவசாய நலத் திட்டங்களால் குடிநீர் ஆதாரமும் அதிகரித்துள்ளது” என ராகுல் காந்தியின் திட்டம் புகழப்பட்டுள்ளது.