டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தாலும் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆரூடம் தெரிவித்து இருக்கிறார்.
மகாராஷ்டிர அரசியல் நிலவரம் சற்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சிவசேனா தலைமையிலான ஆட்சிக்கு என்சிபியும், காங்கிரசும் ஆதரவு தெரிவித்துள்ளன.
விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சிவசேனா கூட்டணியை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அவர் கூறி இருப்பதாவது: சந்தர்ப்பவாதம் தான் அவர்கள் (சிவசேனா,என்சிபி, காங்) கூட்டணியில் இருக்கிறது. பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதுதான் இந்த கட்சிகளின் குறிக்கோள்.
இந்த அரசாங்கம் ஒருவேளை அமைந்தால், 6 முதல் 8 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்குமா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றார். ஒருவேளை அந்த கூட்டணி உடைந்தால் பாஜக ஆட்சியமைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் கூறியதாவது: கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எதுவும் நடக்கலாம். கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கூற்றுப்படி யார் முதலமைச்சர் என்பது பின்னர் தீர்மானிக்கலாம் என்றும் பேசப்பட்டு இருந்தது. ஆனால், எதிர்பாராதது எல்லாம் நடந்துவிட்டது என்றார்.
பாஜக, சிவசேனா இடையே விரிசல் அதிகமான தருணத்தில் பேச்சு வார்த்தைக்கு நிதின் கட்கரியை அனுப்பி வைக்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.