டில்லி
நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதி கிடைக்க வேண்டும் என அவர் தாயார் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு அந்தப் பெண்ணும் அவர் நண்பரும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் மரணம் அடைந்தார். இந்த குற்றம் தொடர்பாக ஆறு பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் திகார் சிறையில் 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
மேலும் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் சீர்திருத்தப் பள்ளியில் மூன்றாண்டு அடைக்கப்பட்டு அதன் பிறகு விடுவிக்கபடார். மீதமுள்ள நான்கு பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து நடந்த மேல் முறையிட்டு வழக்கில் டில்லி உயர்நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு இந்த தீர்ப்பை உறுதி செய்தது. அதையொட்டி குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி மற்றும் அசோக் பூஷன் ஆகியோரின் அமர்வு தூக்குத் தண்டனையை 2016 ஆம் ஆண்டு உறுதி செய்தது. இந்த வழக்கு நிர்பயா (பெண்ணின் புனை பெயர்) வழக்கு எனப் பேசப்பட்டு வந்தது. இந்த வழக்கின் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்ததால் உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டில்லி நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நீதிமன்றத்தில் போதுமான அளவு நீதிபதிகள் இல்லாததால் வழக்கு விசாரணை மிகவும் மெதுவாக நடந்து வந்தது. அத்துடன் இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் யாரும் இல்லாததால் கடந்த இரு மாதங்களாக விசாரணை நடப்பதும் நின்று போனது. இதையொட்டி நிர்பயாவின் பெற்றோர் இந்த வழக்கை போதுமான நீதிபதிகள் உள்ள வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என மனு அளித்துள்ளனர். நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அடுத்த கட்ட விசாரணையை 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இது குறித்து நிர்பயாவின் தாய், “கடந்த 7 வருடங்களாக நான் எனது மகளுக்கும் எனது குடும்பத்துக்கும் இழைக்கப்பட அநீதிக்கு எதிராகப் போராடி வருகிறேன். நான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த குற்றவாளிகளின் கருணை மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்து அவர்களுக்குத் தண்டனை வழங்கி எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.