டில்லி,

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்வர்கள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதி மன்றம்.

டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கில்,  உச்ச நிதி மன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

டில்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 நபர்களால் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.  குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும்படி  நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.

இதற்கிடையில்  டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிர்பயா, உயர் சிசிக்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 வயதான அக்சய் தாகூர் என்ற சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொடூரத்தை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2013ம் ஆண்டு  மார்ச் 11ந்தேதி சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டான். அதைத்தொடர்ந்து மீதமுள்ள 4 பேருக்கும் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 10ந்தேதி தூக்கு தண்டனை விதித்து டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதில் இளம் குற்றவாளி சிறுவன் விடுதலை செய்யப்பட்டான்.

இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இநத வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.